அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுப்பு!!

334

US

வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த போரின்போது பயந்த நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களின் குடும்பங்கள் இரணைப்பாலை சென்.அந்தனிஸ் விளையாட்டு மைதானங்களில் ஒழிந்தனர்.

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் இருந்த அப்பாவி தமிழர்களை அப்போது இலங்கை இராணுவம் குறிவைத்து குண்டுகளை வீசி அழித்தது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரத்துடன் அமெரிக்க தூதரக டுவிட்டர் வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒழிந்த அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்றது. இது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய மைதானம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், யுத்த சூனிய வலயம் – 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ராப் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் : கருணாதிலக அமுனுகம

வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படத்துடனான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.