இலஞ்சம் வாங்கும் அரச அதிகாரிகள், ஊழியர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க ஆம் ஆத்மி அரசு அறிவித்த உதவி அழைப்பு முறைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம். அறிவிக்கப்பட்ட 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்து குவிந்து விட்டதாக கூறப்படுகின்றது.
டெல்லியில் இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை பற்றி தகவல் தர பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
அதிகாரிகள் எவரேனும் இலஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இலஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும்.
டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்த உதவித் தொலைபேசி அழைப்பு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்புக்கு இப்போது புகார்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளதாம். தொடங்கப்பட்ட 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்து குவிந்து விட்டதாம். அழைப்புகளைக் கையாள முடியாமல் ஊழியர்கள் திணறுவதால் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
இந்த தொலைபேசி அழைப்புகளை, இதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள 15 நிபுணர்கள் வசம் மாற்றி விடுகின்றனர். அவர்கள் தொலைபேசியில் புகார் கூறுபவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவார்கள்.
அதன் பின்னர் ஸ்டிங் ஒப்ரேஷன் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த டிப்ஸும் தரப்படும். ஸ்டிங் ஒப்ரேஷன் மூலம் கிடைத்த ஆதாரத்தை அப்படியே ஊழல் தடுப்புப் பொலிஸாருக்கு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையில் இறங்குவார்கள்.





