விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவிக்கு வலி மேற்கு தவிசாளர் வாழ்த்து!!

341

Venveli

விண்வெளிக்கு முதன்முறையாக செல்ல தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வரும், மாணவர்களில், அதீத திறமை மிக்க இரண்டு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தீர்மானித்தது.

அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் ஒரு தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன். இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமைபெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் வெகுவிரைவில் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார். அவ்வாறு செல்லும் பட்சத்தில், விண்வெளிக்குச் செல்லும் முதலாவது தமிழ் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொள்வார். இது குறித்து கருத்து வெளியிட்டபோதே, நாகரஞ்சனி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது..

இச் சந்தர்ப்பம் தமிழ் மங்கையருக்கு மிகமிக உயர்ந்த நிலையாகவே உள்ளது. தமிழ் இனம் தனித்துவமான பண்புகளை கொண்ட இனம் என்பதை பல வடிவங்களில், பல காலங்களில் வெளிப்படுத்தி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளது.

இவ்வாறே மீண்டும் ஒரு தடவை இவ் தமிழ் மாணவி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளார். இம் மாணவிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை அவர் மென்மேலும் உயர்வு பெற வாழ்த்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.