நிறைவேற்று அதிகாரத்தை நான் கட்டாயம் உபயோகிப்பேன் : புதிய ஜனாதிபதி உறுதி!!

302

புதிய ஜனாதிபதி

நாட்டுக்காக தனது நிறைவேற்று அதிகாரத்தை தான் கட்டாயம் உபயோகிப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் வைத்து இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில், சிங்கள மக்களின் வாக்குகளின் அடிப்படையில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் எனக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தேன்.

ஆனால் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் நான் உங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனவே நான் உங்களிடம் மீண்டும் ஒருமுறை, நாட்டை கட்டியெழுப்ப உங்களது ஒத்துழைப்பையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு சிங்கள பௌத்தர். எனவே நான் சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பேன். கலாச்சாரத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். தேர்தலின் போது எனது வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றியை தெரிவித்து கொள்வதுடன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் எனது நன்றி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எமக்கு ஆதரவு வழங்கினார்கள். அது குறித்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அனைத்து ரீதியிலும் எமது வெற்றிக்காக பாடுபட்ட அனவைருக்கும் அதேபோல வெளிநாடுகளில் இருந்த வந்து எமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

இந்த நாட்டின் ஒற்றுமையையும் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் கடமை என்னுடையது. எனது அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடு நாட்டின் பாதுகாப்பு என்பதே என உறுதி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.