பணப்பையை தவறவிட்ட வெளிநாட்டு தம்பதியினர் : சாரதியின் மனித நேய செயற்பாடு!!

574

மனித நேய செயற்பாடு

முச்சக்கரவண்டியில் தவறவிட்டு சென்ற பணப்பையை, அதன் சாரதி சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் தம்பதியினர், சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஹட்டனிலிருந்து முச்சக்கரவண்டியொன்றில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த குறித்த முச்சக்கரவண்டியில், சுமார் 8000 ரூபா பணம், 50 யூரோக்கள் மற்றும் ஜேர்மனி நாட்டினுடைய வங்கி அட்டைகள் உள்ளடங்கிய பணப்பையை தவறவிட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை நேற்றிரவு சுத்தம் செய்ய சென்றபோது பணப்பை ஒன்று இருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நல்லதண்ணி நகரில் அமைந்துள்ள விடுதியின் உரிமையாளருக்கு அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் அவர்களிடம் குறித்த பணப்பையை முச்சக்கரவண்டி சாரதி ஒப்படைத்துள்ளார். குறித்த சுற்றுலா பயணிகள் இருவரும் சாரதிக்கு நன்றி தெரிவித்ததுடன், அவருக்கு சன்மானம் வழங்கினர்.