ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று தெரிவித்து பணமோசடி : அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!!

494

Policeமோசடியான வகையில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று கூறி அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் பற்றி எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அவ்வாறான சம்பவம் ஒன்று அண்மையில் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி விசாரணைப் பிரிவின் அதிகாரி என்ற தோரணையில் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மிரட்டி அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபா கோரிய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருப்பதாகவும், தங்கொட்டுவவைச் சேர்ந்த கைதி எனவும் தெரியவந்துள்ளது.

அரசாங்க காணியொன்றை போலி ஆவணங்களால் கொள்வனவு செய்த காரணத்தைக் கூறி வர்த்தகரிடம் இருந்து கப்பம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

மோசடியை மறைக்கும் விதமாக 5 லட்சம் ரூபாவை தனக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி விசாரணைப் பிரிவின் அதிகாரி எனக் கூறிய சிறைக்கைதி கோரியிருந்தார்.

அவர் கேட்ட பணம் குறிப்பிட்ட வங்கியொன்றில் கணக்கில் போடப்பட்டதாகவும், அதனை கைதியின் மனைவி பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 011 2685151 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பொலிஸ் குறுந்தகவல் சேவையின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள PLC, Space, CRT, Space, Apply number என்பனவற்றை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.