ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு இந்தியாவில் 10 வருட சிறை!!

807

Arrestedஇலங்கைக்கு மூன்று கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய மத்திய பிரதேசத்திலிருந்து சென்னை வழியாக இலங்கைக்கு ஹெராயின் கடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் கடந்த 2007 ஜூலை 13ல் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற முயன்ற பாஸ்கரன் என்பவரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் 2 கிலோ 825 கிராம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஹெராயினைப் பறிமுதல் செய்து பாஸ்கரனைக் கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மத்திய பிரதேசத்தில் இருக்கும் இப்ராஹிம் என்பவர் மும்பையைச் சேர்ந்த ராஜனுக்கு ஹெராயினை அனுப்பியதாகவும், அந்த ஹெராயினை இலங்கையைச் சேர்ந்த குக்கி, தேவராஜ் ஆகியோர் சென்னைக்கு கொண்டு வந்து பாஸ்கரன் மூலம் இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, முத்துவேல் தேவன், ராஜன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குக்கி, இப்ராஹிம், யூசுப் ஆகியோர் தலைமறைவாகினர். முத்துவேல் தேவன் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

முத்துவேல் தேவன், பாஸ்கரன், ராஜன் ஆகியோர் மீதான வழக்கு போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசு சிறப்பு சட்டத்தரணி என்.பி.குமார், சட்டத்தரணி செல்லதுரை ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பாஸ்கரனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் இந்திய ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். முத்துவேல் தேவன், ராஜன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.