வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிசாரினால் விசேட திட்டம் முன்னெடுப்பு!!

475

வீதி விபத்தை தடுக்க..

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வீதி ஓழுங்கு முறை தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை ஒன்றை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இன்றில் இருந்து ஒருவார காலத்திற்கு பாதசாரிகள் மற்றும் சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வவுனியா நகரப்பகுதியிலும் வீதி ஒழுங்குமுறைகள், வீதிச் சட்டங்கள் தொடர்பில் பாதசாரிகள் மற்றும் சாரதிகளுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பரிசோதகர் அசோக, உப பொலிஸ் பரிசோதகர் திஸநாயக்க, மக்கள் தொடர்பாடல் பொலிஸ் சார்ஜன்ட் பிரேம திலக ஆகியோரின் நேரடி பங்குபற்றுதல்களுடன் போக்குவரத்து பொலிசாரும், சமுதாய பொலிஸ் குழுவும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

இதன்போது வீதியில் நடந்து சென்றவர்கள், துவிச்சக்கர வண்டியில் பயணித்தோர், மோட்டர் சைக்கிளில் பயணித்தோர், முச்சக்கர வண்டியில் பயணித்தோர், சிறியரக வாகனங்களில் பயணித்தோர் என பலரையும் மறித்து தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

இதன்படி 150 சாரதிகளுக்கும், 350 பாதசாரிகளுக்கும் முதல் நாளில் இவ்வாறு விழிப்புணர்வூட்டல் இடம்பெற்றது.

அத்துடன் ஒரு வார காலத்திற்கு இவ் விழிப்பூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து பொலிசார் மேலும் தெரிவித்தனர்.