பிரதமர் மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் : கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி!!உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றிருந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இது குறித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் குறித்து ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“நேற்று இந்திய பிரதமர் மோடி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நான் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோடி அவர்கள் அன்பு நினைவாக எனக்கு வழங்கினார்.

அப்போது அந்த பயிற்சிநெறியில் என்னுடன் இணைந்திருந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் இருந்தார். தற்போதைய நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.


“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கியபோது, நான் மெய்சிலிர்த்து வியந்தேன்.

அந்த அரிய படத்தை அன்பு நினைவாக எனக்கு வழங்கிய பிரதமர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்” என கூறியுள்ளார்.