வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மஹாயாகம்!!

452


Sivan templeருத்திர பாராயண மஹாயாகத்தாலும் தேவார பாராயணத்தாலும் கோவில்குளம் சிறப்புற்றது

திருக்கைலை யாத்திரை சென்று திருப்பியோரால் ருத்திரயாகத்தாலும், திருமுறை வேதத்தாலும் வவுனியா கோயில் குளம் அதிர்ந்தது.



“நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பது அனைத்துச் சைவத் தமிழர்க்கும் நன்கு தெரிந்ததே. அண்மையிலே தெய்வ நம்பிக்கை, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சமூக சேவை, ஆலயத்திருப்பணிகள், திருமுறையீடுபாடு, அறப்பணிகள், கல்விப்பணிகள், சிவதீட்சை, முதியோர் பராமரிப்பு, கோசாலை, அருளகம் பராமரிப்பு, திருவாசகம் முற்றோதல், பிரதோஷ வழிபாடு என்பனவற்றையே தமது பிறப்பின் தெளிவான நோக்கம், பயன் என உணர்ந்து வாழும் ஒரு ஐந்து பேரது திருக்கைலையாத்திரையின் பயனாக மிகச் சிறப்பான முறையிலே ஏகதச ருத்திரயாகம் நிகழ்ந்தேறியது.

வவுனியா, கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் டிசம்பர் மாதம் 30, 31 ஆம் திகதிகளிலே ஏகாதச ருத்திராபிஷேக மஹாயாகம் பெரு பக்திபூர்வமாகவும், கிரியாபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் திருமுறைபூர்வமாகவும் கோயில் மூலம் பிரதேசமே அதிர்ந்தது.



மஹலயாக மந்திரங்களினாலும், திருமுறைப் பாராயணத்தினாலும், கிரியா பக்குவத்தினாலும் இந்தயாக கைங்கரியம் வெகு விமர்சையாகவே நிகழ்ந்தேறியது. எத்தனையோ பேர் திருக்கைலாயம் சென்று திரும்பியுள்ளனர். கைலாய யாத்திரையே ஒரு கண்டம் தான். ‘முத்திப்பேறு’ சைவ சித்தாந்தம் கூறும் பலாபலன் ஆகும்.



ஆனால் சைவம் கூறும் நெறி ‘தனிமனித முத்தியே’ அல்ல. தனிமனித உயிரின் முயற்சி விகசித்து வியாபித்து விரிந்து சமூகப்பயன் செய்யும் போதுதான் சைவத்தின் மாண்பும் மகத்துவமும் துலக்கமுறும். இத்தத்துவமே சைவ சமயாசாரியர் நால்வர் கண்ட பக்திநெறி. ‘திருவருள்’ மகிமை, ‘திருவருள் மகிமை’ என்று பேசும் பலர் நினைக்கிறார்கள் அது இறைவனின் கருணைதான் என்று அது தவறு. ‘திருவருள் உயிர்ப்பு இயக்கமாக நிகழ்வதே’ நால்வர் கண்டு காட்டிய சைவநெறி இவை அத்தனைக்கும் தெளிவான விளக்கமாகவே நிகழ்ந்தேறியது ருத்ராபிஷேக மகாயாகம்.


உலக நலன் வேண்டியும் எங்கும் அமைதியும் அன்பும் நிலவி மக்கள் சுகமாக வாழப் பிரார்த்தித்தும் இந்த யாகம் நடத்தப்பெறுகிறது என்பது திடசங்கற்பமாக இருந்தது.

வவுனியா கோவில் குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோயிலின் அறங்காவலர் சபையின் தலைவர் சிவமணி மு.சபாநாதன் பொருளாளர் சிவமணி ஆ.உமாதேவன் உறுப்பினர் வை.செ.தேவராசா ஆகிய மூவரும் திருக்கோயிலின் சார்பிலேயும் அன்பர் திரு. க.நவரட்ணம் அவர்கள் இணைந்தும் திருக்கைலாய யாத்திரையை மேற்கொண்டனர்.


இக்குழுவினர் சிவாலயத்தின் முன்னால் யாத்திரைக்கு முன்னர் சிவனுக்கும் அறங்காவலர் சபையின் செயலாளர் சிவமணி ஆ.நவரெத்தினராசா அவர்களிடம் செய்து கொண்ட சத்தியம் ஒன்றுண்டு. “தாம் திருக்கைலை யாத்திரை செய்துவிட்டுத் திரும்பி வருமிடத்து உலக நன்மை கருதி ருத்திராபிஷேக மஹாயாகம் ஒன்றைச் செய்வோம்” என்பதே சத்தியமாகும்.

வெற்றிகரமாக யாத்திரையை முடித்துக் கொண்ட இவர்கள் உபயமாக அமைந்து முடிந்ததே ஏகாதச ருத்திராபிஷேக மஹாயாகமாகும்.”

“மஹாயாக” ஏற்பாடுகளில் முக்கியமானது யாகசாலை அமைப்பு, அடுத்துத் தகுதி வாய்ந்த வேதாகம விற்பன்னமிக்க சிவாச்சாரியவர்கள், மேலும் திருமுறை ஓதத்தக்க தேவார மூர்த்திகள், இன்னும் கிரியா முறையிலே அனுபவமும் தேர்ச்சியும் பெற்று வழிநடத்தும் சாதகாசிரியர்கள் இந்த நான்கு சிறப்பான ஏற்பாடுகளும் இந்த யாகத்திலே செய்து முடிக்கப்பட்டிருந்தமை மிகுந்த மனமகிழ்ச்சியையும், வெற்றியையும் தந்தது. சர்வயேதகம், சர்வ சாதகம் செய்யவல்ல வேதாகமக்கிரியை வல்ல சிவாச்சாரியப் பெருமக்கள் முன்னின்று இம்மஹா யாகத்தை நிகழ்த்தினார்கள்.

சிறப்புற அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலே சிவஸ்ரீ ஸ்ரீநிவாச இரகுநாதக் குருக்கள் அவர்களது நல்லாசியுடன் ஆலைய பிரதம குரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வரக் குருக்களுடன் மேலும் பதினொரு சிவாச்சாரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


சர்வ சாதகாசிரியர்களாக நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதீன குரு சிவஸ்ரீ பாலசந்தரக் குருக்கள் பாலகணேசக் குருக்கள் அவர்களும், மட்டுவில் சிவஸ்ரீ ப. சனாதன சர்மா அவர்களும் முன்னின்று மஹாயாகத்தை வழி நடத்தினார்கள். இரு தினங்களும் சிவாச்சாரியார்களின் மந்திர ஒலியும், அறங்காவலர் சிவமணி ஆர் உமாதேவன் அவர்களது கம்பீரமான கணிரென்ற குடிலிலே ஒலித்த திருத்தாண்டவத் திருமுறைகளும் கோயில் குளம் பிரதேசத்தையே அதிர வைத்தன.

முதல் நாள் இடம்பெற்ற கிரியைகளில் ஒன்று கங்காதீர்த்த சங்கிரணம் என்பது இந்தியப் புண்ணிய தீர்த்தங்களும், பாலாவி கீரிமலை, பாவநாசம் தீர்த்தங்களும் இணைந்த விதத்திலே ருத்திராபிஷேக ஏற்பாடுகள் அமைந்தன. யாகத் திரவியங்களும் திருப்திகரமாகவே கொண்டு வரப்பட்டிருந்தன. மிகப்பெரியளவிலே 4 ஆழமான முப்பரிமாணத்துடன் அமைந்த வர்ணம் பூசப்பட்ட பிரம்ம, விஷ்ணு, ருத்திர குண்டம் அமைக்கப்பட்ட மகாயாகம் அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு மங்கள வாத்தியக் குழுவினரான வீ. கரன் குழுவினர் தவில், நாதஸ்வரம் வாசித்தனர். நிகழ்வில் காரைநகர் தவில் மேதை வீராசாமி அவர்களும் தவில் வாசித் தார். பூமாலை அலங்கார வேலைப் பாடுகளை கெளரீஸ்வர நாதன் மேற்கொண்டிருந்தார். 30 போத்தல் தேன் கருப்பஞ்சாறு, விஸ்திரம், சமித்துகள் தாராளமாகவே யாகத்தில் அக்கினி குண்டத்தில் சொரியப்பட்டன.

மூலவருக்கு 31 ஆம் திகதி யன்று ஏகாதச ருத்திர பாராயணத்துடன் ஏகாதசி ரவ்ய அபிஷேகம் ருத்திர திரிசதி அர்ச்சனை என்பனவும் சிறப்பாக நடந்தேறின. அறங்காவலர் செயலாளர் சிவமணி ஆ.நவரெத்தினராசா அவர்கள் முன்னின்று வழிநடத்தினார். ஒவ்வொரு சைவ மகனும் உணர வேண்டியதொரு செய்தி இந்த யாகத்தினாலே பெறப்பட்டது. அதாவது தனிமனித முத்தி என்பதல்ல நோக்கம்” சமூகத்தின் ஷேமம் நலன் என்பதே சைவ சாரம்” என்பதை இந்த மஹாயாகம் தெட்டத் தெளிவாக உணர்த்திவிட்டது.