2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறார்?

546


ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.


மேஷம் : 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித சந்தோஷத்தையும் தரப்போகின்றன.

மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.குருவின் பார்வை ராகுவிற்கு கிடைத்துள்ளது. இதுநாள் வரை எதையும் கொடுக்காமல் அமைதியாக இருந்தார் 2020ஆம் ஆண்டில் இனி அள்ளிக்கொடுக்கப் போகிறார். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும்.

ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது.


செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.


ரிஷபம் :  2020ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்கள் நல்ல வளர்சியை கொடுக்கும் உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சனி குரு உடனும் அமர்ந்துள்ளார். 2020ஆம் ஆண்டு அஷ்டம சனி பாக்ய சனியாக மாறி விடுவார்.

பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள்.

அஷ்டமத்தில் உள்ள கேது பகவான் குரு உடன் இணைந்துள்ளதால் உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்.

கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சந்தோஷம்.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். ரிஷப ராசிக்காரர்கள் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மிதுனம் :  2020ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களே வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. காரணம் ஜென்ம ராகுவை குரு பார்வையிடுகிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள்.

புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு உடன் இணைந்துள்ள கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார்.

குழந்தைகளால் மதிப்பு கிடைக்கும் விற்பனையாகமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம் :  2020ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பகவான் பார்வையிடுகிறார். ஆறாம் இடத்தில் குரு உடன் சேர்ந்து உள்ள கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது.

உங்களுக்கு நீண்டநாளாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். குரு பார்வையால் நிறைய பணவரவு வரும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். ப்ராடு நிதி நிறுவனங்கள் சீட்டு கம்பெனிகளில் போட்டு விட்டு ஏமாந்து போய் விட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார்.

பண வருமானத்தை குருவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். இந்த ஆண்டு புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம் :  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு.

லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேது, குருவின் பார்வை விழுகிறது.

நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும்.

எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உங்க வருமானம் 2020ஆம் ஆண்டு அபரிமிதமாக உயரும். அதற்கான வேலைகளை ராகுவும் கேதுவும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும். விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்க பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும் திருமண பாக்கியம் கிடைக்கும்.

கன்னி :  2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்களால் புதிய அனுபவங்களை கிடைக்கும். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும்.

நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். குரு இருப்பதால் நிறைய பிரச்சினைகள் தீரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் முடிவுக்கு வரும். சுகமான ஆண்டாக அமையப்போகிறது.

புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள் அதற்கான வேலையை ராகு செய்வார்.

உங்க வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.

துலாம் :  துலாம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ராகு கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியங்கள் துலங்கும் உங்களின் எண்ணங்கள் நிறைவேற குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உங்க ராசிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது.

மனதில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த நோய்கள் குணமடையும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் வரப்போகிறது.

திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டு வந்த உங்களின் ஏக்கம் தீரப்போகிறது.

நீண்ட நாட்களாக வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஞான காரகன் கேதுவின் 3ஆம் இடத்துச் சஞ்சாரத்தினால் குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள்.

பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும்.

விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளால் அமைதி பிறக்கும். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம் :  2020ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடையும் நேரம் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர்.

அஷ்டம ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் நிறைய நடக்கும் நேரம் கைகூடி வரப்போகிறது. கை நழுவிப்போன நல்ல விசயங்கள் உங்களை மீண்டும் தேடி வரும்.

வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் கட்டி முடித்து குடியேறும் காலம் வரப்போகிறது.

பணவரவு அற்புதமாக இருக்கும். கழுத்தை நெரித்து வந்த கடன்கள் அடைபடும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு : 2020 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.

ஜென்ம குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். நல்ல காரியங்கள் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.

ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது பகவான் குரு உடன் சேர்ந்து உள்ளது கோடீஸ்வர யோகத்தை தருகிறார். மனதில் இருந்த கலக்கம் நீங்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

உங்க பேச்சிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் கைகூடி வருகிறது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகரம் :  2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று அமர்ந்துள்ளார்.

இதுநாள் வரை சனி பார்வையோடு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் கொடுத்து வந்தார்.

இனி நோய்கள், கடன்கள் நீங்கும் வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். இந்த புத்தாண்டில் புதியதாக கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். மோட்ச ஸ்தானத்தில் விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்கள் உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள்.

நல்ல வேலையும் உத்யோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். நோய்கள் தீரும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் முகத்தில் அருள் தாண்டவமாடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். வெற்றி மீது வெற்றிகள் வந்து உங்களை சேரும்.

கும்பம் :  2020ஆம் ஆண்டு முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர் ராகுவும் கேதுவும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.

உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருக்கிறார் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். தொழிலுக்காக வெளியூர் பயணம் சென்று தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் துறையில் இதுநாள்வரை ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வேலைகள் நிறைய சம்பளத்துடன் கிடைக்கும். வங்கியில் பணம் சேமிப்பும் அதிகரிக்கும்.

குடும்பத்தை விட்டு வெளியூரில் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு உருவாகும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். குலதெய்வத்தின் அருள் கூடியிருக்கிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும்.

செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம் :  2020ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் இது சிறப்பான அம்சமாகும். உங்க வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் பலிக்கும். தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும்.

சொந்த பந்தங்கள் நண்பர்களிடையே மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுவார்த்தை வெற்றிகரமான முடியும். சிலருக்கு காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடியும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது. சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.

புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள்.

பொருளாதார நிலை சீரடையும். இந்த ஆண்டு நீங்க எந்த விசயத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு பலிதமாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும். தடைகள் நீங்கும்.