நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்..
நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது. முக்கியமாக சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சொந்த மண்ணில் விளையாடும் நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
எனெனில் இங்கு விளையாடும்போது அவர்கள் கூடுதல் பலத்துடன் இருப்பார்கள். முதல்முறையாக நியூஸிலாந்தில் விளையாடும் எங்கள் வீரர்களுக்கு இது சவாலானதாகவே இருக்கும்.
வெளிநாடுகளில் விளையாடும்போது இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் முன்பு இருந்ததை விட வெளிநாட்டில் எங்கள் பந்து வீச்சாளர்கள் இப்போது சிறப்பாகவே செயல்படுகின்றனர்.
கடந்த மாதம் தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை எனவே இப்போது நியூஸிலாந்து தொடர் குறித்து இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டுக்கு அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் வரும் 19ம் திகதி நேப்பியரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக கூடுதலாக ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. பெப்ரவரியில் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க இருப்பதால் போட்டிகள் குறைக்கப்பட்டன.
2015ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடைபெறவுள்ளது. எனவே இப்போட்டி உலகக் கோப்பைக்கான பயிற்சியாகவும் இந்திய அணிக்கும் அமையும்.





