யாழில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் எட்டு பேர் காயம்!!

440

எட்டு பேர் காயம்

யாழ். பொன்னாலைச் சந்தியில் உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேகமாகச் சென்ற உழவு இயந்திரம் பொன்னாலைச் சந்தியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது உழவு இயந்திர பெட்டியானது தனியாகக் கழன்று தடம் புரண்டது.

இதன்போது படுகாயமடைந்த இருவர் உட்பட 6 பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றைய இருவர் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பின்னர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) ஆகியோரும் பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), எஸ்.துஜிபன் (வயது-20) ஆகியோருமாக 8 பேரே காயமடைந்துள்ளனர்.

பசுங்கிளிராசா, துஜீபன் ஆகியோர் காரைநகர் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.