ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

724

Rajivமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேர் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஏற்கனவே தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின் 13 வழக்குகள் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு, ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த வழக்குகளின் தீர்ப்புக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.