வாட்டி வதைக்கும் வெப்பம் : திடீரென மயக்கமடையும் வீரர்கள் (வீடியோ)

480

Heat

அவுஸ்திரேலியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய விதிமுறைகளை கிராண்ட்ஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவில் தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளதால், மக்கள் அனைவரும் கடற்கரையை நோக்கிப் படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் திறந்தவெளி அரங்குகளில் விளையாடும் வீரர்களின் நிலையோ மிக மோசம்.

வெப்பம் தாங்க முடியாமல் வெகு விரைவாக சோர்வடைந்து விடுகின்றனர், இந்த வாரம் நடந்த போட்டிகளில் இதன் தாக்கம் வெகுவாக உணரப்பட்டது.

நேற்று முன்தினம் தனது முதல் சுற்றில் தோல்வியடைந்த கனடா நாட்டு வீரர் பிரான்க் டான்செவிக் வெயில் தாங்காமல் மயக்கம் போட்டு விழுந்தார், சூழ்நிலைகள் மிகவும் மனிதாபிமானமற்றதாக இருக்கின்றது என கருத்து வெளியிட்டுள்ளார்.

அன்று நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த குருமி நராவும், சீனாவைச் சேர்ந்த பெங் ஷுயாயும் மோதினர். இதில் தோல்வியுற்ற சீன வீராங்கனையும் வெயிலின் தாக்கத்தினாலேயே வாந்தியெடுத்து மயங்கி விழுந்ததாக தனது தோல்விக்கான காரணத்தினைத் தெரிவித்தார்.

வீரர்கள் மட்டுமின்றி அன்று நடைபெற்ற மற்றொரு பந்தயத்தில் பந்து எடுத்துத் தரும் சிறுவன் ஒருவனும் மயக்கமடைந்துள்ளான்.
இதனால் கிராண்ட்ஸ்லாம் போட்டி அமைப்பாளர்கள் தீவிர வெப்ப கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது திறந்தவெளி மைதானத்தில் ஆடப்பட்டுவரும் போட்டிகள் அந்த சுற்றுடன் நிறுத்தப்படும். ரோட் லவர் அரங்கமும், ஹிசென்ஸ் அரங்கமும் மேற்புறம் மூடப்பட்டு அதன்பின் அங்கு ஆட்டங்கள் தொடரப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.