வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!!

246

அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள்

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில், குடியிருக்காத மக்களின் காணிகளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.

எனவே காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் எனவும் காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்கி அப்பகுதியில் மக்கள் அச்சமின்ற வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறும் குடிநீர் பிரச்சனைக்கு தாம் முகம் கொடுப்பதுடன் வீதிகளும் கிரவல் வீதிகளாக காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

சுமார் 2 மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தாம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.