பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரென கூறப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இவருக்கு சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி கிளிநொச்சியில் பிறந்துள்ளார்.
பிரான்ஸில் இவர் பணியாற்றிய இடத்தில் இருக்கும் குறைந்த வசதிகள், சட்டவிரோதமாக நபர்களை வேலைக்கு சேர்ப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து ஜெயந்தன், பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் கூறிய போதிலும் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.
ஜெயந்தன் தர்மலிங்கம், கொழும்பில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என இலங்கை பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்ததுடன், அவருக்கு எதிரான சர்வதேச பொலிஸார் ஊடாக பிடிவிராந்தை பிறப்பித்திருந்தனர்.