இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

415

srilanka team
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காடிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது. கடந்த 2011 உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு பின் இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன.

இந்திய அணி இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு, பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இலங்கை அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் அனுபவ வீரர்களான சங்ககார, ஜெயவர்தன இருவரும் முதுகெலும்பாக உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 333 ரன்கள் சேர்க்க உதவிய துவக்க வீரர்கள் பெரேரா, தில்ஷன் நல்ல நிலையில் உள்ளனர். பின்வரிசையில் கைகொடுக்க அணித் தலைவர் மத்யூஸ், சண்டிமால், திரிமான உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் மிரட்டுவதற்கு மலிங்க காத்திருக்கின்றார். தவிர, குலசேகரவும் சிறப்பாக பந்து வீசுகின்றார்.

இந்திய அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு இரண்டிலும் சிறந்த நிலையில் உள்ளது. எனவே இரு சமபல அணிகள் மோதும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாகவும் விறுவிறுப்பு  நிறைந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கை அணி வெளியேறும்.

முக்கிய புள்ளிவிபரங்கள்..

**இலங்கைக்கு எதிராக சாஜாவில் 2000ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சமாக 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

**1984ல் இலங்கை அணி 96 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு எதிராக குறைந்த ஓட்டங்களை பதிவு செய்தது.

**இலங்கை, இந்தியா அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 75 ல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 52ல் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளுக்கு முடிவில்லை.

**இரு அணிகள் மோதிய போட்டிகளில், இந்திய அணி அதிகபட்சமாக 414/7 ஓட்டங்களையும் (ராஜ்கோட், 2009) எடுத்தது. இதே போட்டியில இலங்கை அணி அதிகமாக 411/8 ரன்கள் எடுத்தது.