எதிர்பாராத இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணமடைந்துள்ளார் என அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவரது உடலில் மேற்புறத்தில் காயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளது. மேலும் இது அவரது மரணத்துக்குக் காரணமாகவும் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
சுனந்தா இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டதாலும் இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என பல யூகங்கள் நிலவுகிறன.
மருத்துவ பரிசோதனை செய்த வைத்தியர்கள் தங்களின் அறிக்கையில் உறுதியான முடிவை எதுவும் அறிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணம் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தியர்கள் தரப்பில் கூறியிருப்பதாவது,
சுனந்தா மரணம் எதிர்பாராத வகையில் திடீரென நடந்திருக்கிறது. இது இயற்கைக்கு எதிரானதாக உள்ளது. இவரது உடலில் சில காயங்கள் உள்ளன. இந்த காயங்கள் இறப்புக்கு காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் இல்லை. சில மாதிரிகள் பயோலாஜிக்கல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து தான் முழு விவரத்தை தெரிவிக்க முடியும். இவ்வாறு வைத்தியர்கள் தெரிவித்தனர். உடல் பரிசோதனை முடிந்ததும் சுனந்தா உடல் அமைச்சர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டெல்லியில் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார். வேனில் இருந்த போது அமைச்சர் மிக கவலையுடன் கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார்.
இந்த மரணம் குறித்து பொலிசாருக்கு எவ்வித முழு தகவலும் கிடைக்கவில்லை. சுனந்தா மரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் அவர் வைத்திருந்த ஐபோன், ஐபேட் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். ஹோட்டல் அறையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினைக் கொண்டும் விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளனர்.