மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பொங்கல் வழிபாடுகள்!!

561

பொங்கல் வழிபாடுகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம், வாழைச்சேனை, கல்குடா, வாகரை, கிரான் உள்ளிட்ட பகுதிகளில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்தில் இன்று காலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி பல கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் தேவாலயத்தில் இன்று காலை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இந்த பொங்கல் விழா நடாத்தப்பட்டது.

பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஜெஸ்ரின் ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனித அருளானந்தர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜெஸ்ரின் வின்சன்ட் மற்றும் அருட்தந்தை ஆகியோரின் தைப்பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தமிழர்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மதவேறுபாடுகளுக்கு அப்பால் பெருமளவான பொதுமக்களும் இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.