அஜித்துடன் வீரம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் போன்ற படங்களிலும் நடித்தார். அவை எதிர்பார்த்தபடி போகாததால் மலையாளத்துக்கு போனார். அங்கு மம்முட்டியுடன் பிபி என்ற படத்தில் நடித்தார். அது வெற்றி பெற்றதால் ஏராளமான படங்கள் குவிந்தது.
மலையாளத்தில் 40 படங்கள் நடித்துள்ளார். வீரம் இவரது 44வது படம். பாலாவின் தாத்தா ஏ.கே.வேலன் அருணாச்சலம் ஸ்டூடியோவின் அதிபர் நிறைய எம்.ஜி.ஆர். படங்களை தயாரித்து உள்ளார். இவரது சகோதரர்தான் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய இயக்குனர் சிவா. மீண்டும் தமிழ் படத்தில் நடித்தது பற்றி பாலா சொல்கிறார். நான் நடித்த தமிழ் படங்கள் சரியாக போகாததால் இங்கு வாய்ப்பு கிட்ட வில்லை. ஆனால் மலையாளத்தில் நான் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடின.
அங்குள்ள ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். திறமை மற்றும் கடின உழைப்பை தான் அங்குள்ள ரசிகர்கள் பார்க்கிறார்கள். வெற்றியை பார்ப்பது இல்லை. தங்களில் ஒருவராக என்னை ஏற்றுக் கொண்டனர். ஆனாலும் நம் தாய் மொழியான தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. வீரம் படம் மூலம் அது நிறைவேறியுள்ளது.
அஜித் மிகச் சிறந்த மனிதர். திறமையான நடிகர். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அஜித் ரசிகர்களும் என்னை ஏற்றுக் கொண்டு உள்ளனர். பீட்சா மாதிரி வித்தியாசமான படங்களை தமிழ் ரசிகர்கள் ஜெயிக்க வைக்கிறார்கள். வீரம் படத்துக்குபின் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன். இவ்வாறு பாலா கூறினார்.





