நாட்டில் இரு மொழிகளுக்கும் சம உரிமை அங்கீகாரம் இருக்கின்றது : வாசுதேவ நாணயக்கார!!

523

Vasudeva

நாம் தனியே பிரிந்து வாழ முடியாது. ஒருவருடன் ஒருவர் இணைந்தே வாழவேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் நேற்று (19) நடாத்திய தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இந் நாட்டிலே இரு மொழிகளுக்கும் சம உரிமை அங்கீகாரம் இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ முடியாது ஒருவருடன் ஒருவர் இணைந்தே வாழவேண்டும்.

இந்த பொங்கல் விழா போன்று ஏனைய மதங்கள் கலாச்சார நிகழ்வுகளும் ஏனைய மாவட்டங்களிலும் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும். எனவே நாம் அனைவரும் சமாதானமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டிய கட்டத்தை அடைந்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் G.A. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மற்றும் இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த போதிலும் அவர்கள் யாரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.