துவிச்சக்கர வண்டி பயணம்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம், பருத்தித்துறையை நோக்கி ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸால் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நித்தம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்’ நேற்றைய தினம் மன்னாரை வந்தடைந்துள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டு குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்று அங்கிருந்து முல்லைத்தீவு, திருகோணமலை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பை நோக்கி பயணிக்கவுள்ளனர்.

குறித்த நபர் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்குச் சென்று தனது ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

மேலும் குறித்தநபர் தொடர்ச்சியாக 10ஆவது வருடமாக ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




