சாதாரண நிலையில் இருந்து பெரும் கோடீஸ்வரராக மாறிய விவசாயி : ஆச்சரிய காரணம்!!

537

கோடீஸ்வரராக மாறிய விவசாயி

இந்தியாவில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பெரும் கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் படேல். இவர் குடும்பம் விவசாய குடும்பமாகும். ஆனால் குடும்பத்தினர் யாரும் பெரிய அளவில் கல்வி கற்காத நிலையில் ஜிதேஷ் மட்டும் வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்தார்.

இதையடுத்து சாதாரணமாக விவசாயம் மூலம் வருமானம் ஈட்டி வந்த குடும்பத்தாருடன் ஜிதேஷும் சேர்ந்து விவசாயம் செய்ய தொடங்கினார்.

இதற்கு அவர் பயின்ற வேளாண் அறிவியல் படிப்பு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதையடுத்து விவசாயம் மூலம் அவர்களின் வருமானம் பெருக தொடங்கியது. தற்போது ஜிதேஷ் லேடி ரொசட்டா என்ற ரகத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.

சிப்ஸ், பிஸ்கட் தயாரிக்க பயன்படுவதால், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ 17 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுவதால், ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக ஜிதேஷ் படேல் தெரிவித்தார்.

மேலும் இனப்பெருக்கம், நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல் மற்றும் தோட்டக்கலை போன்ற விவசாயத்துக்கு தேவையான விடயங்கள் குறித்து தன் குடும்பத்தாருக்கு சிறப்பு திறன் உண்டு என ஜிதேஷ் கூறியுள்ளார்.

இதனிடையில் கடந்தாண்டு மட்டும் குஜராத்தில் இருந்து ஒரு லட்சம் டன் லேடி ரொசட்டா உருளைக்கிழங்கு இந்தோனேசியா, குவைத், சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.