மருத்துவ தேவைக்காக இலங்கையில் கஞ்சா வளர்க்க புதிய சட்டம் வருகிறது!!

298

Kanchaஇலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார்.

தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த சட்டவரைவு, சில நாட்களில் அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டு, பாராளுமன்றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாரம்பரிய மருத்துவ உலகில் கஞ்சாவுக்கு மூவுலகையும் வென்ற மூலிகை என்ற பெயர் இருக்கிறது. தேசிய பாரம்பரிய மருத்துவ முறைக்கு உகந்த விதத்தில் கஞ்சா செய்கை அமைய வேண்டும் என்கின்ற விதிமுறைகளை நாங்கள் எங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்குகிறோம் என்றார் அமைச்சர்.

வெறும் கஞ்சா வளர்ப்பு அனுமதிக்கான சட்டமாக மட்டும் வராமல் முழுமையான ஆயுர்வேத மருத்துவச் சட்டமாக புதிய சட்டம் உருவாகும் என்றும் சாலிந்த திசாநாயக்க கூறினார்.

இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விவகாரம் ஏற்கனவே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அரசியல்வாதிகளும் அதன் பின்புலத்தில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் இப்படியாக கஞ்சா செய்கைக்கு கிடைக்கும் சட்ட அங்கீகாரம் பல வழிகளிலும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் அல்லவா என்று அமைச்சரிடம் வினவியபோது.

பாரம்பரிய மருத்துவராக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டும், வெளிப்படைத் தன்மையுடன், உரிய கண்காணிப்புடன், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தேவையான அளவுக்கு மட்டும் கஞ்சா வளர்ப்பதற்கான விதிமுறைகளைத் தான் நாங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்குகிறோம் என்றார் அமைச்சர்.

இந்த அனுமதி மூலம் பெரிய அளவில் தோட்டங்களாக கஞ்சா வளர்க்க முடியாது. சில செடிகளை மட்டுமே மருத்துவர்கள் வளர்க்க முடியும். துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்கள் நிச்சயமாக சட்டங்களில் அகப்படுவார்கள் என்றும் கூறினார்.

போதைக்கு முற்றுப்புள்ளி என்பது தான் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்த சட்டத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகளும் அமைச்சரவையில் இருக்கின்றன. உங்கள் சட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்றும் வினவப்பட்டது.

நான் இந்த நாட்டின் பாரம்பரிய மருத்துவர்களின் தேவைகளுக்கான அமைச்சர். அமைச்சரவையில் இதுபற்றி விவாதம் உருவாகும். அதன்படி அடுத்த நடவடிக்கை அமையும். பாரம்பரிய மருத்துவதுறை அமைச்சருக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று அவர்கள் நினைத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறினார்.

ஆங்கிலேயே முறைப்படி வந்த சட்டத்தில் தான் கஞ்சாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது என்றும் கஞ்சா செய்கை பற்றிய தங்களின் புதிய சட்டம் வந்தால் திருட்டுத் தனமாக கஞ்சா செய்யும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்படும் என்றும் இலங்கையின் பாரம்பரிய மருத்துவத் துறைக்கான அமைச்சர் கூறினார்.

-BBC தமிழ்-