வவுனியா வளாகத்தில் புதிய கற்கைகள் பீடம் ஆரம்பம்!!

566

புதிய கற்கைகள் பீடம்

யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் புதிதாக தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தினை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனவரி மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வவுனியா வளாகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வளாகத்தில் வியாபார கற்கைள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் என்பன ஏற்கனவே செயற்பட்டுவந்த நிலையில் மூன்றாவது பீடமாக இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் தொழில்நுட்பவியல் துறை மற்றொரு பீடத்தின் அலகாக இணைக்கப்பட்டிருந்த நிலையில், 100 மாணவர்கள் கற்கை செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். தற்போது தனிப் பீடமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் 150 மாணவர்கள் வரை அனுமதிக்கபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா வளாகத்தின் முதல்வர் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் உயர்கல்வி அமைச்சின் அனுமதியுடன் குறித்த பீடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி வடமாகாணத்தில் இணைக்கப்பட்டு பல்கலைகழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வளாகம் 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இரண்டு பீடங்களுடன் யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.

23 வருடங்களிற்கு பின்னர் மூன்றாவது பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த வளாகத்தை பல்கலைகழகமாக தரமுயர்த்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.