இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனு விவரம் வருமாறு..
பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இணையதளத்தில் ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்து, இசை அல்பம் வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடல்களில் உள்ள வரிகள், பெண்களையும், குறிப்பாக தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது.
பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளன. உடனடியாக, அந்த பாடல்களை தடை செய்து, சைபர் கிரைம் பொலிசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை வெறி பாடல் மூலம் அனிருத் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.





