வவுனியாவை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகளின் நாடு முழுவதுமான சக்கர நாற்காலிப் பயணம்!!

37


சக்கர நாற்காலிப் பயணம்


இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 மாற்றுத்திறனாளிகள் இணைந்து இந்த நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலியுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமச்சந்ர ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும்,


மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலி பயணம் இன்று (02.02.2020) காலை 11.20 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது.


குறித்த நடைபவனியானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (01.02) ஆரம்பமாகி இன்று (02.02) வவுனியாவை வந்தடைந்து.

வவுனியா ஊடாக இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சென்று நான்காம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர நிகழ்வினை சென்றடையவுள்ளது.

வவுனியாவை வந்தடைந்த அவர்களுக்கு புதிய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு கௌரவம் வழங்கினார்கள்.

அத்துடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ரூபா 10,000 மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினர் ரூபா 10,000 அவர்களின் செலவுக்காக அன்பளிப்பாக வழங்கி வைத்தனர். இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும் எம்மைப் போன்ற நாடு முழுவதிலுமுள்ள மாற்றுத்திறனுடையோரின் சிறப்பான எதிர்கால வாழ்வு கருதியும் சக்கர நாற்காலியில் இலங்கையைச்சுற்றி வலம் வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை நாம் இந்த சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

1. இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

2. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும்.

3. நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.

5. அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொது மலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகல துறைகளிலும் அணுகும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

6.வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த எமது உரிமைகள் சலுகைகள் என்பவற்றைப் பெற்றுத்தரும் நல்ல நோக்கம் கொண்ட எமது நாட்டு ஜனாதிபதியாகிய தாங்கள் பல வகைககளில் எமக்கு பக்கப்பலமாக உறுதுணையாக இருக்கிறீர்கள்.

உங்கள் சிந்தனையில் இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டுமென இதில் பங்குபற்றும் மூவராலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.