நிர்வாகத் தெரிவு

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும் தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (09.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பேரவையின் தலைவர் த.இ.மலரவன்,

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத் திட்டங்களும் அரசியல் நகர்வுகளும் மக்களை உள்ளடக்கி மக்களுடைய ஆலோசனைகளை பெற்றுத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகையினால் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள இணைந்து செயற்பட எவ்வித விருப்பத்தினையும் தெரிவிக்கவில்லை. அவர்களும் எமக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் போ ராளிகள் யாவரும் ஒர் அணியாக பணிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகளிர் அணி தலைவி பாவு கஜேந்தினி,

நாங்கள் போ ராளியாக இருக்கின்ற சமயத்தில் எங்களுக்கு தனித்துவமான ஒர் மரியாதை காணப்பட்டது. ஆனால் தற்போது அது காணப்படுவதில்லை.

அதன் காரணமாவே பெண்களுக்கான உரிமையினை வென்றெடுப்பதற்காகவே விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளோம்.

பெண் தலைமைத்துவ குடும்பங்களை எந்தவொரு அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்வது இல்லை. விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் எதிர்காலத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சமூகத்தில் முதன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.




