ஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே வரி விலக்கு இல்லை என தமிழக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள்.
ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு கிடைத்துவிடும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டே வியாபாரம் பேசி விற்றுள்ளனர். ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை வரிவிலக்கு கிடைக்கவில்லை.
வெளியான பிறகும் அதற்கான அறிகுறியே இல்லை. எனவே படத்தை வாங்கியவர்கள் இரு பட தயாரிப்பு அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
வரி விலக்கு கிடைப்பது மாதிரி தெரியவில்லை. அதனால் கொடுத்த பணத்தில் 20 சதவிகிதத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். 4 கோடி ரூபாய்க்கு ஜில்லாவையும் மூன்றரை கோடி ரூபாய்க்கு வீரத்தையும், திருச்சி ஏரியாவுக்கு விற்றிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதில் ஜில்லாவுக்கு வாங்கியதிலிருந்து 80 இலட்சத்தை திருப்பி விநியோகஸ்தருக்கு தந்திருக்கிறார் தயாரிப்பாளர். இதே போல வீரம் படத்துக்கு 70 இலட்சத்தை திருப்பித் தர வேண்டி வந்ததாம். இதே மாதிரி மற்ற ஏரியாக்களை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் பணத்தை திருப்பித் தந்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
இந்த இரு படங்களுக்கு மட்டுமல்ல இனி வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் ஒன்றிற்குக் கூட வரிவிலக்கு கிடையாது என முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





