பேஷன் டிசைனர் வேலையை உதறிவிட்டு ஆடு வளர்ப்பில் பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்!!ஆடு வளர்ப்பில்..


உலகில் தற்போது இருக்கும் பெரும்பாலானோர், வேலைக்கு சென்றால் போதும், மாதம் வரும் சம்பளத்தை வைத்து நாட்களை கடத்திவிடலாம். அதன் பின் சிறிய வீடு, குடும்பம் என்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்றனர்.அவர்களுக்குள் திறமை இருந்தாலும், அதை வெளியில் கொண்டு வராமல் அப்படியே வாழ்க்கையை கடத்திவிடுகின்றனர். எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் வேலை செய்தோமா? சம்பளத்தை வாங்கினோமோ என்று கூறிவிடுவர்.


இப்படி பலர் கூறுவதற்கு மத்தியில், சிலர் எடுக்கும் தைரியமான முடிவுகள் அவர்களை எங்கோ கொண்டு சென்று விடும். அவர்களை சிறந்த தொழிலதிபர்களாக மாற்றிவிடும். இதில் நாம் சிலரை கேள்விபட்டிருப்போம்.

அப்படி ஒரு தைரியமான முடிவெடுத்து, தற்போது ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வரும் ஸ்வேதா தோமர் என்பவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.


கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆன இவர், கணவருடன் பெங்களூருவிற்கு வந்தார். அப்போது அவர் ஒரு பேஷன் டிசைனராக இருந்தார்.

பிரபல என்ஐஐஎப்டி கல்வி நிறுவனத்தில் பேஷன் வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்ற இவர், இதில் ஒரு கில்லாடி என்றே கூறலாம்.

இருப்பினும் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. இதனால் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று யோசித்தார்.

அப்போது, ஸ்வேதா ஒருமுறை தனது கணவருடன் ஒரு ஆட்டுப் பண்ணையை பார்வையிட்டார். அங்குள்ள ஆடுகளுடன் நேரம் செலவிட்டது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு அடிக்கடி பண்ணைக்குச் சென்று ஆடு வளர்ப்பு குறித்த நுணுக்கமான விஷயங்களை புரிந்துகொள்ளத் துவங்கினார்.

ஏற்கனவே தொழில் துவங்க வேண்டும் என்று யோசனையில் இருந்த ஸ்வேதாவிற்கு, ஆடுகளை பற்றி தெரிந்து கொள்வதால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன? என்று முடிவெடுத்துள்ளார்.

பெங்களூர் ஆடு வளர்ப்பிற்கு உகந்த இடம் இல்லை என்று உத்தர்கண்ட் மாநிலத்தில் தெஹ்ராதூன் பகுதிக்கு அருகில் இருக்கும் ராணிபோக்ரி என்கிற கிராமத்தை தெரிவு செய்தார்.

அங்கு தன்னுடைய சேமிப்பு முழுவதையும் ஆடு வளர்ப்பு பணியைத் துவங்குவதற்காக முதலீடு செய்தார். அதன் பிறகு விரிவாக்கப் பணிகளுக்காக வங்கியிலிருந்து கடன் வாங்கினார்.

இப்படிப்பட்ட ஒரு படிப்பை படித்துவிட்டு, சம்பளம் வாங்கி ஜாலியாக இருக்காமல் இப்படி தேவையில்லாமல் ஆடு வளர்க்கிறேன் என்று இருக்கிறாளே? என அவருடைய உறவினர்கள் பலர் தவறான முடிவெடுப்பாதாக ஸ்வேதாவை கூறியுள்ளனர்.

இருப்பினும், உற்சாகம், தன்னம்பிக்கையுடன் எந்த தடை வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தைரியத்துடன் துவங்கினார்.

முதலில் 250 ஆடுகளுடன் வணிகத்தைத் துவங்க வங்கியில் கடன் வாங்கினார். அவரது பண்ணையில் நாட்டு இனங்களான ஜம்னாபாரி, தோத்தாபரி, சிரோஹி, பார்பாரி போன்றவை இருந்தது. இப்படி ஆடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டதன் மூலம் ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார்.

வெறும் ஆடு வளர்ப்பில் மட்டும் ஈடுபடாமல், அங்கிருக்கும் பண்ணையில் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களை ஆடு வளர்ப்பதற்கு ஊக்குவிக்கிறார். உத்திரகாண்டை தொடர்ந்து இவர்பிற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளார்.

ஆடுகளுக்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் அளிக்கப்படுவதாக கூறும் ஸ்வேதா, சில சமயம் தானே சந்தைப்பகுதிக்கு ஆடுகளை எடுத்துச் செல்வேன் என்று கூறியுள்ளார்.

ஆடுகளை பாரம்பரிய சந்தையில் விற்பனை செய்வதுடன் இணையம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறார். ஒரு தைரியமான முடிவின் மூலம், தற்போது ஒரு தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார். ஒரு பெண்ணாக சாதித்து வருகிறார் ஸ்வேதா.