விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய 1 கோடியை கெளதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்து கெளதம் மேனன் கூறியதாவது..
என் தொழிலை முடக்கி போடுவதற்காகவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நான் வேறு நபர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. நான் எப்போது படவேலைகளை துவங்குகிறேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தபோதே முதல் மிரட்டல் வந்தது. வழக்கு போட்டார்கள். அதன் பிறகு சிம்பு, அஜித் படங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் வழக்கு போட்டார்கள். இப்போது அஜித் பட வேலையை துவங்க இருப்பதால் மீண்டும் கோர்ட்டுக்கு போய் உள்ளனர்.
என் பக்கத்து நியாயங்களை விளக்கி பதில் மனு தாக்கல் செய்து உள்ளேன். ஏற்கனவே இந்த புகாரை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்பதையும் தெரிவித்து உள்ளேன். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் போன்றோர் இப்பிரச்சினையில் தீர்வு காண முன் வந்துள்ளனர். இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன் என்று கெளதம் மேனன் கூறினார்.





