எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

4


தஞ்சை பெரியகோவில்


உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னர் ராஜராஜ சோழன், தன், 25வது ஆட்சியாண்டில், கி.பி., 1003ல், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல், கட்டுமானத்தை நிறைவு செய்தார்.


தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், முன்பு, ராஜராஜேஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டது. மராட்டியர் ஆட்சிக்கு பின், பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படுகிறது.


கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. தமிழர் கட்டடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்குகிறது.

கடந்த, 1987ம் ஆண்டு, ‘யுனெஸ்கோ’ என்ற ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பெரிய கோவில் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலக அதிசய பட்டியலில், எட்டாவது இடத்தில், இக்கோவிலை இடம் பெற செய்ய, தஞ்சையைச் சேர்ந்த பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சர்வதேச அளவில் உள்ள தமிழர்களிடையே, கையெழுத்து இயக்கம் நடத்தவும், இக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுனரும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டு மான உறுப்பினருமான இராஜேந்திரன் கூறியதாவது,

பெரியகோவிலை, உலக அதிசய பட்டியலில் இடம் பெற வைக்கும் முயற்சியை, கும்பாபிஷேக தினத்தில் இருந்து துவங்கியுள்ளோம். இக்கோவில் கட்டுமானம் முதல், சிற்பங்கள் வரை, அனைத்தும் அதிசயமானது.

உலக அதிசயத்தில், தஞ்சை கோவில் இடம்பெற, தமிழகம் மட்டு மின்றி, சர்வதேச அளவில், தமிழர்கள் ஒருங்கிணைத்து, வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

அதன்பின், உலக அதிசய குழுவை, கோவிலுக்கு அழைத்து வந்து பார்வையிட செய்வோம். உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவில் இடம் பெரும் வரை, எங்கள் பணி ஓயாது” என அவர் கூறினார்.