விஜயகாந்தை முறையாக கூட்டணிக்கு அழைக்கும் கருணாநிதி!!

320


Vijayakanthதிமுக தலைவர் மு. கருணாநிதி,தங்கள் கூட்டணியில் இணையுமாறு தேசிய முற்போகு திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பொதுவாக கூட்டணி அமைத்தே பல்வேறு கட்சிகள் போட்டியிட்டு வந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் யார் எந்த அணியில் என்பது இதுவரை தெளிவாகவில்லை.



முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக போட்டியிடும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளாவது ஒதுக்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது.

மாநிலங்களவைத் தேர்தல்களில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அணுகியபோது அது குறித்து பரிசீலித்து பதிலளிப்பதாக ஜெயலலிதா கூறினார் என சிபிஎம்மின் மாநிலச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.



திமுக கூட்டணியும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. விடுதலைச் சிறுத்தைகள்,மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவை அக்கூட்டணியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாநிலத்தில் பரவலாக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் அக்கூட்டணியில் இணையுமா என்பது தெரியவில்லை.



தனித்துவிடப்பட்டிருக்கும் காங்கிரஸ் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க முயல்கிறது, இன்னொருபுறம் அக்கட்சியை பாரதீய ஜனதாவும் அழைத்துக்கொண்டிருக்கிறது. விஜயகாந்தோ இதுவரை யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் தமது கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்க இருப்பதாக மட்டும் கூறியிருக்கிறார்.


திமுக, தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாகவே நம்பப்படுகிறது. அக்கட்சி தங்களுடன் இணைய வாய்ப்பிருப்பதாக ஓரிரு நேரங்களில் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் கடந்த வாரம் அப்படி எதுவும் பேச்சுவார்த்தை இல்லை என்றார். இன்று செய்தியாளர்களிடம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க., தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறதே எனக்கேட்டபோது அவர்களுடைய நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன் என்றார்.


கருணாநிதி. தொடர்ந்து செய்தியாளர்கள் தே.மு.தி.க. விற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்கலாமே எனக்கேட்டபோது, எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம் என்றார்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவை ஆதரிக்கக்கோரி காங்கிரசை அணுகும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவுடன் மதிமுக கூட்டணி அமைக்கப்போவதாக வைகோ கூறியிருக்கிறார்,அவ்வாறே பாட்டாளி மக்கள் கட்சியும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ கூட்டணி எதுவும் இன்னமும் முடிவாகவில்லை என்கிறது.