ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டு 90 வயதில் திருமணம் செய்த தியாகி!!

278

Marriageஇந்தியாவின் கோழிக்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி தனது 90வது வயதில் 60 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கோழிக்கோடு அருகேயுள்ள வெஸ்டுகில் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை (90). சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 1942ம் ஆண்டு கோழிக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது மனைவி மரணமடைந்தார். மனைவி இறந்த பின் பல வருடங்களாக தனியாக வசித்து வந்த இவருக்கு 2வது திருமணம் செய்து வைக்க நண்பர்களும் உறவினர்களும் முயன்றனர்.

ஆனால் அவர் மறுத்து வந்தார். தற்போது 90வது வயதில் நாராயண பிள்ளைக்கு 2வது திருமணம் செய்ய ஆசை ஏற்பட்டது. தனது விருப்பத்தை அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

முதலில் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் அவருக்கு திருமணம் முடிக்க திட்டமிட்டு பல்வேறு இடங்களில் பெண் தேடினர்.

இதற்கிடையில் வயநாட்டில் திருமணம் ஆகாத 60 வயது மூதாட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாராயணபிள்ளை தனது நண்பர்களுடன் ராதாவை பெண் பார்க்க வயநாட்டிற்கு சென்றார். ராதாவும் விருப்பம் தெரிவித்தார். அந்த திருமணத்திற்கு நாராயண பிள்ளையின் மகன்கள், மகள்கள் உள்பட அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் வெஸ்டுகில்லில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது.

இதுகுறித்து நாராயணபிள்ளை கூறுகையில், எனது முதல் மனைவி இறந்த பின்னர் 2வது திருமணம் செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. தற்போது எனக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. எனக்கு மனைவி இல்லாவிட்டால் எனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும். எனவே அந்த ஓய்வூதியம் யாரும் இல்லாத ஒருவருக்கு கிடைக்கட்டும் என்று கருதி தான் 2வது திருமணத்திற்கு சம்மதித்தேன் என்றார்.