சமநிலையில் முடிவடைந்த இந்திய – நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி !!

299

New Zealand v Indiaநியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியர் மற்றும் ஹாமில்டனில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற நிலையில் களமிறங்கியது இந்திய அணி. முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி ஹட்ரிக் வெற்றி பெற்று, தொடரை வசப்படுத்தும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மார்டின் கப்டில் அதிரடியாக ஆடி 111 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன் 65 ஓட்டங்களை விளாச 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நியூசிலாந்து 314 ஓட்டங்களை விளாசியது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முஹமட் ஷமி மற்றும் ரவீந்ர ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி 315 என்ற கடிகமான இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாட நிர்பந்திக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தவான் (28), ரோஹித் சர்மா (39) அரைச்சதம் கூட பெறாத நிலையில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். விராட் ஹோலியும் 6 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் அணித் தலைவர் தோனி நிதானமாக ஆடி 50 ஓட்டங்களை சேர்த்த நிலையில் வெளியேற இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. இந்த நிலையில் பொறுப்புடன் ஆடிய ஜடேஜா மற்றும் அஸ்வின் அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

அஸ்வின் 65 ஓட்டங்களுடன் வெளியேற 50 ஓவர்கள் நிறைவில் இந்தியா 9 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 314 ஓட்டங்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.

ஜடேஜா 66 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். நியூசிலாந்து சார்பில் கோரி அன்ரசன் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டில் வெற்றியீட்டியுள்ள நியூஸிலாந்து அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நெருக்கடி நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.