இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பெண்கள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.
இதன்படி முன்னதாக இடம்பெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பெண்கள் அணி ஹெட்ரிக் வெற்றியைப் பெற்று தொடரை வசப்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று விஜயநகரில் முதலாவது இருபதுக்கு இருபது போட்டி, நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை பெண்கள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்திய அணி சார்பில் மிதாலி ராஜ் 67 ஓட்டங்களை விளாச கவுர் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்திய பெண்கள் அணி 147 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்படி 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை அணி சார்பில் ஷசிகலா சிறிவர்த்தன 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த 20க்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.





