19 ஆண்டுகளுக்கு பின்பு மகனை சந்தித்த தந்தைக்கு கிடைத்த ஏமாற்றம்!!

536

Court19 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை விட்டு பிரிந்த தந்தையுடன், செல்ல மறுத்த மகனால் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த சையது என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனக்கும், அரபு நாட்டை சேர்ந்த அமல் என்ற பெண்ணிற்கும் 1993ம் ஆண்டு திருமணம் நடந்தது.

நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம், ராதனூர் கிராமத்தில் குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 1994ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. நான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றேன். மனைவியும், மகனும் ஊரில் இருந்தனர்.

இந்நிலையில் என் மாமனார் மனைவியை மூளைச்சலவை செய்து 1995ம் ஆண்டு அக்டோபர் 29ம் திகதி மகனை உறவினர் ஒருவரிடம் விட்டு விட்டு அரபு நாட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்கக்கோரி 2007ம் ஆண்டு முதல் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன். என் மகனை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனுவை நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் பொலிசார் மனுதாரரின் மகன் நியாஸ் அகமதுவை (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைக்குழந்தையாக இருக்கும் போது பிரிந்த மகனை, 19 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றத்தில் வைத்து பார்த்த சையது பூரிப்படைந்தார். ஆனால் நியாஸ் அகமது, தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.

தந்தை, தாயை பார்த்ததில்லை. வளர்ப்பு தந்தை மட்டுமே எனக்கு தெரியும். வளர்ப்பு தந்தையான அனுசா அலியுடன் செல்ல விரும்புகிறேன் என நீதிபதிகளிடம் கூறியுள்ளார்.

மகனை தன்னுடன் அனுப்ப வேண்டும் என சையதுவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், நியாஸ் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி முடிவெடுக்க அவருக்கு உரிமை உண்டு என்று கூறி வளர்ப்பு தந்தையுடன் செல்ல அனுமதி வழங்கினர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மகனை நேரில் பார்த்தும் அவரை அழைத்து செல்ல முடியாமல் சையது ஏமாற்றமடைந்தார்.