அதிகநேர கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் பெருவிரல் வலி : அவசியம் படியுங்கள்!!

1229

பெருவிரல் வலி

தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.

சில நேரங்களில் நீண்ட நேரக் கைத்தொலைபேசி பாவனை கழுத்து வலி, தோள்மூட்டு வலி, மணிக்கட்டு வலி போன்ற பல வலி நிலைமைகளை தோற்றுவிக்கின்து நீண்ட நாட்களில் இது மிக தீவிரமான தசை மற்றும் மூட்டு சார்ந்த நோய்நிலைகளை உருவாக்குகிறது.

அவ்வாறான தீவிரமான நோய்நிலைகளில் குறுந்செய்தி வழி பெருவிரல் வலி என்ற நிலை மிக முக்கியமானதாகும்   டி – குவெர்னின் சின்றொம் (de quervain’s syndrome) என்ற மருத்துவ நாமத்தில் வழங்கப்படும் இந்நிலை உருவாக நீண்டநேர கைத்தொலைபேசி பாவனை காத்திரமான வகிபங்கை கொண்டது.

நீண்டகால அதிக பெருவிரல் சார்ந்த பயன்பாடு காரணமாக பெருவிரல் மற்றும் மணிக்கட்டு பகுதியில் உள்ள தசை நார்கள் தம்மை சுற்றியுள்ள மென்சவ்வுகளில் அதிகளவு அருட்டல் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது இதன் காரணமாக அவ்விரு தசை நார்களும் அதை சுற்றியுள்ள மென்சவ்வும் தடிப்படைந்து வீக்கமடையும். அது தீவிர நிலையை அடையும்போது அதி தீவிரமான வலி மற்றும் அசைவுக் குறைபாடுகள் ஏற்படுகின்றது.

இது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது கைப்பெருவிரல் அடிப்பகுதியில் (மணிக்கட்டு பகுதியில்) வலி, பெருவிரல் அடிப்பகுதியில் வீக்கம் மற்றும் கையை பொத்தி பிடிக்கும்போது அல்லது மணிக்கட்டை சுழற்றும்போது வலி தீவிரம் அடைதல் இவ் அறிகுறிகள் சிறிது சிறிதாக அதிகரித்து பின் தீவிரம் அடையும்.

நீண்டநேர கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தவிர்த்து பெருவிரல் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளை அதிகளவு அசைத்தும் அப்பகுதிகளுக்கு அதிகளவு அழுத்தம் கொடுத்தும் வேலை செய்யும் நபர்களுக்கும் அதாவது நீண்டநேரம் பேனை பாவித்து எழுதுபவர்கள் படம்வரைப்பவர்கள் சிற்பம் செதுக்குபவர்கள் மற்றும் பொறிகள் திருத்துனர்கள் ஆகியோருக்கும் இந்நிலை உருவாவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உண்டு.

பெரும்பாலும் 30 – 50 வயதுள்ள நபர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர் ஆண்களை விட பெண்களுக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் 4 மடங்கு அதிகமாகும் பெண்களில் இந்நிலை பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது இது அந்நேரத்தில் அவர்களின் ஓமோன் சுரப்புக்களில் நிகழும் மாற்றங்களினால் இது நிகழ்கின்றது. மேலும் ரூமட்டிக் ஆத்தரைடிஸ் எனும் நோய் நிலைமையினால் பாதிக்கப் பட்டோருக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும்.

இந்நோய்க்கான சிகிச்சைகளில் இயன் மருத்துவத்தின் பங்கு இன்றியமையாததாகும் சாதாரண நிலைகளில் தசை மற்றும் மென்சவ்வுகளில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கான மருந்துகளுடன் பிசியோதெரபி சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. நாளாந்த பிசியோதெரபி சிகிச்சையுடன் splint எனும் சார்புறுப்பை 4 தொடக்கம் 6 வாரங்கள் வரை பயன்படுத்தவேண்டும் .

தீவிரமான வலி இருக்கும் வேளைகளில் வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் நேரடியாக ஊசி மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செலுத்தப்பட்டு பின்னர் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது ஆய்வுகளின் அடிப்படையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும் இம் முறை அதிக வினைத்திறனானது என விதந்துரைக்கப்படுகிறது ஆனாலும் அதை தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படாதவிடத்து குறித்த நிலை மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும்.

பிசியோதெரபி சிகிச்சையின் போது வலியினை குறைப்பது மட்டும் அல்லாது பாதிப்படைந்த தசை நார்களை வலுப்படுத்தி மீண்டும் குறித்த நிலை வருவதை தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஊசி மருந்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளில் (மிக நீண்டகாலமாக மற்றும் விட்டுவிட்டு தொடர்ச்சியாக இந்நிலை ஏற்படும் இடத்து) சத்திர சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது ஆனாலும் குறித்த சத்திர சிகிச்சையின் போது மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

சத்திர சிகிச்சையின் பின் மணிக்கட்டு மற்றும் பெருவிரல் மூட்டுக்களின் அசைவுகளை சீர்படுத்தவும் தசைகளின் வலிமை மற்றும் இயக்க தன்மையை சீர்ப்படுத்தவும் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

குறித்த நோய் நிலை ஏற்பட்டதன் பின்னர் சிகிச்சை பெறுவதை விட நோய்நிலை ஏற்படமுன்னர் அதனை தவிர்ப்பது சிறந்த மற்றும் வினைத்திறனான நடவடிக்கை ஆகும். அதிக நேரம் தொடர்ந்து கைத்தொலைபேசி பாவிப்பதை குறைப்பதன் மூலமும் அதிகளவு பெருவிரலை பயன்படுத்துவதை குறைத்து மற்றய விரல்களை பயன்படுத்துவதன் மூலமும் இதனை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகளவில் பெருவிரல் மற்றும் மணிக்கட்டுபகுதியில் அழுத்தம் ஏற்படுத்தும் வேலைகளை புரிவோர் தொடர்ச்சியாக அவ்வேலையை செய்யாது இடைஇடையே ஓய்வெடுத்துக்கொள்ளல் இழுவை சார்ந்த பயிற்சிகள் மற்றும் தசைகளுக்கு வலிமையூட்டும் பயிற்சிகள் செய்தல் என்பவற்றின்மூலம் குறித்த பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்

மணிக்கட்டுப்பகுதியில் சாதாரண வலி ஆரம்பமானவுடன் பொருத்தமான இயன்மருத்துவரது (Physiotherapist) ஆலோசனையை பெற்றுக்கொள்வது பின்னர் வரும் தீவிரமான நிலைமையை தவிர்ப்பதில் பேருதவி புரியும்.

தி.கேதீஸ்வரன் (B.Sc PT)

இயன்மருத்துவர்

மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா