வவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்!!

338

Vavuniya bus standவவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் என வவுனியா மாவட்ட தனியார்பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் தமது சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அச் சங்கம் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களாகிய நாம் கடந்த பல வருடங்களாக எமது மாவட்டத்தில் சகல வசதிகளும் அடங்கிய பேரூந்து தரிப்பிடம் இல்லாமல் பலவித கஸ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றோம்.

வீதி ஓரங்களிலும் கடைகளுக்கு முன்னாலும் பேரூந்துகளை நிறுத்தி கடை உரிமையாளர்களுக்கு தொல்லைகளை கொடுத்தும் பயணிகளுக்கு பலவித அசௌகரியங்களை உண்டாக்கியுமே எமது சேவைகளை வழங்கி வருகின்றோம்.

இத் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கே எமக்கென ஒரு பேரூந்து நிலையத்தை அமைத்து தருமாறு பல தரப்பிடமும் கோரிக்கை விடுத்து வந்தோம். அதன் பிரகாரம் நகர மத்தியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஏ 9 வீதியில் உள்ள ஓர் இடத்தில் புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு அப்போதைய அரசாங்க அதிபர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸினால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

பின்னர் அடிக்கல் நாட்டப்பட்டதுடனேயே இப் பணிகளும் இதுவரை காலமும் நிறுது;தப்பட்டிருந்தது. எனினும் தற்போது மீண்டும் அவ் இடத்தில் புதிதாக அடிக்கல் நாட்டப்பட இருப்பதாகவும் பேரூந்து நிலையத்திற்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்ப இருப்பதாகவும் அறிகின்றோம்.

ஆனால் குறித்த இடம் விவசாய பண்ணைக்கு சொந்தமான இடம் மட்டுமல்லாது நகர மத்தியில் இருந்து தூர இடத்தில் அமைந்துள்ள இடமுமாகும். இவ் இடத்தில் புதிய தனியார் பேரூந்து நிலையம் அமைக்கப்படுவதனால் நகர மத்தியில் இருந்து பயணிகள் முற்சக்கரவண்டிகளின் மூலமே பேரூந்து நிலையத்திற்கு வரவேண்டிய நிலை உருவாக்கப்படுவதோடு பேரூந்து உரிமையாளர்களாகிய எமக்கு பாரிய நஸ்டங்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தும் விடயமாகும்.

அது மட்டுமன்றி இ.போ.ச இற்கான தரிப்பிடம் நகர மத்தியிலேயே இருக்கப்போகின்றது. இந் நிலையில் பயணிகள் முற்சக்கர வண்கள் மூலம் எம்து சேவையை நாடி வரமாட்டார்கள்.

ஏற்கனவே தேவைக்கு அதிகமான வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சொல்லணா துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் நாம் தனிமைபப்டுத்தப்பட்டு மேலும் கஸ்டங்களுக்கும் நஸ்டங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு தொழிலையே விட்டுச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

ஆகவே தற்போது பஸ் நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை கைவிட்டு முன்னாள் அரசாங்க அதிபரால் சிபாரிசு செய்யப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் அனுமதிக்கப்பட்டுள்ள வரைபடத்தின் படி புகையிரத நிலையத்திற்கும் தற்போதைய இ.போ.ச. பஸ் நிலையத்திற்கும் அண்டிய ஒரே இடத்தில் எமக்கான பேரூந்து நிலையத்தை அமைத்து தருமாறு தயவுடன் வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தின் பிரதிகளை ஜனாதிபதி, போக்குவரத்து அமைச்சர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் உட்பட 23 பேருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.