வவுனியா தனியார் பஸ் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை!!

320

Vavuniyaவவுனியா யாழ் வீதியில் உள்ள அரச பண்ணைக்குரிய காணியில் அமையவிருக்கும் தனியார் பஸ் நிலையத்திற்கான வேலைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட மாகாண முதலமைச்சருக்கு அச்சங்கம் 9 விடயங்களை தெளிவுபடுத்தி அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது..

கடந்த சில தினங்களாக தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கென்று மேற்கூறப்பட்ட இடத்தில் அமைந்த காணியில் பல கட்டட வேலைகள் முன்னெடுத்துச்செல்லப்படுவதையிட்டு வரியிறுப்பாளர் சங்கமாகிய நாம் நகரசபை செயலாளரிடமும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடனும் தொடர்புகொண்டபோது இது தொடர்பாக தங்களுக்கு எதுவித அறிவித்தல்களும், தரப்படவில்லை எனவும் இது கொழும்பிலிருந்து அதிகார மட்டத்தினால் செய்யப்படும் ஓர் காரியம் என்றும் தெரிவிக்கின்னறனர். இதுதொடர்பாக வவுனியா மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளார்கள்.

இதை ஆராயும் போது இதில் பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. இப்படியான சட்டரீதியற்ற விடயங்களை தங்களிற்கு அறியத்தருவது எமது கடமையாகும்.

இப் பஸ் தரிப்பு நிலையமானது அரச பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பொது மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாக நேரிடும்.

குறிக்கப்பட்ட காணித் தொகுதியானது அதன் ஒருபக்க எல்லையாக காமினி மகாவித்தியாலய பாடசாலையை உள்ளடக்கியுள்ளதால் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் கல்விக்கு பெரும் குந்தகமாக அமையலாம்.

குறிப்பிட்ட காணியை சுற்றியும், எதிர் திசையிலும் மக்கள் செறிவாக வாழ்கின்றார்கள். எனவே அமையப்போகும் இவ் பஸ் தரிப்பிடம் அவர்களிற்கு சுற்றாடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சந்தர்பங்கள் உண்டு.

இக்கட்டடங்கள் யாவும் நகர சபையினதோ அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையினதோ அனுமதி பெறப்படாமல் நடைபெறுபவை என அறியவந்துள்ளது.

இச்செயல்பாடானது வவுனியா நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட புதிய நகர் திட்டமிடல் செயற்பாட்டிற்கு முரணான செயற்பாடாக காணப்படுகின்றது அத்துடன் வீண் பண விரயத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் நகரசபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்துள்ள இக்கால கட்டத்தில் இப்படியான பாரிய செயற்திட்டங்களை வவுனியா நகர சபை எல்லைக்குள் செயல்படுத்துதல் வவுனியா மக்களின் சிறப்புரிமைகளை மீறுவதாகவே நாம் கருதுகின்றோம்.

நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதனால் கிராமப்புறங்களிலிருந்து நகர் பகுதிக்குள் கல்விகற்கவரும் மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் அத்துடன் இவர்களின் காலநேரங்களும் வீணடிக்கப்படும்.

கிராமப்புற விவசாயிகள் தங்கள் உள்ளுர் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு எடுத்துசெல்லுதல் மிகவும் சிரமமாக இருப்பதுடன் அவர்கள் இந்த இடத்திலிருந்து இன்னுமோர் வாகன ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

தற்போது உள்ள அரச பஸ் தரிப்பிடத்திற்கு பின்பாக உள்ள அரச ஊழியர் விடுதிகளை (உள்வட்ட வீதி) குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றி அமைத்து பின் உள்வட்ட வீதியில் உள்ள காணியில் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தை அமைப்பது சால சிறந்தது என நாம் கருதுகின்றோம்.

இத்திட்டமே புதிய நகர் திட்டமிடல் கமிட்டியினால் உருவாக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். இத்தீர்மானங்கள் யாவும் வவுனியா வரியிறுப்பாளர் சங்கம் வவுனியா வர்தகர் சங்கம் வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் ஒன்றுகூடி நிறைவேற்றப்பட்டவையாகும்.

எனவே தாங்கள் தயவு கூர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து ஓர் நல்ல முடிவை தருவீர்கள் என வேண்டி நிற்கின்றோம்என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.