விரும்பத்தகாத வார்த்தைகளை பேசி அழகிரி என் மனதை புண்படுத்தினார் : கருணாநிதி வருத்தம்!!

318

Karunanithiதி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறி தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தது தவறு. அவர் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவுக்கு எதிராக செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நியாயம் கேட்டு வருபவர் காலை 7 மணிக்கா வீட்டுக்கு வருவார். அவர் என்னை சந்தித்த போது விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார். அதை எந்த தந்தையாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராலும் பொறுத்துகொள்ள முடியாது.

மு.க.ஸ்டாலின் பற்றி ஏற்கமுடியாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார். இப்போது அதை நினைத்தாலும் என் இதயம் நின்று போவதுபோல் இருக்கிறது.

அவர் என்னிடம் கூறிய குற்றச்சாட்டு கட்சியில் அவருக்கு வேண்டிய சிலருக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்பதும் அவர்களை நீக்கியதும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறினார்.

ஆனால் மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தூண்டுதலாக இருந்தார். கட்சி தலைமை அதை தண்டிப்பது தவறா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். தனக்கு வேண்டிய ஆதரவாளர்கள் கூட்டத்தை வைத்து கொண்டு சுவரொட்டி ஒட்டியது எப்படி முறையாகும், ஸ்டாலின் ஆனாலும் அழகிரி ஆனாலும் என் மகன்கள் என்ற உறவை விட கட்சி உறுப்பினர்கள் என்பதுதான் முக்கியம்.

அண்ணா காலத்தில் இருந்து இதுவரை எத்தனையோ சோதனைகளை சந்தித்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் வளத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக 16 வயது முதல் இந்த சமுதாயத்திற்காக என்னை அர்ப்பணித்து உள்ளேன்.

நான் இந்த சமுதாயத்து பாடுபட்டவன் என்ற முறையில் இந்த உண்மைகளை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இன்று பத்திரிகையாளர்களிடம் இந்த செய்திகளை தெரிவித்துள்ளேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் காங்கிரசுடன் கூட்டணி உண்டா என்று கேட்டபோது, கூட்டணி இல்லை என்றும் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்தார்.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி உண்டா என்று கேட்ட போது நாங்கள் கூட்டணிக்கு அழைத்தது அப்படியே இருக்கிறது. அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.