பிளாஸ்டிக் பைகளிலிருந்து கார் எரிபொருள் தயாரிக்கும் புதிய தொழிநுட்பம்!!

289

Plasticவீணாகும் பிளாஸ்டிக் பைகளை கார் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக நாடுகள் முழுவதிலுமே தவிர்க்க முடியாத பொருளாகி விட்டன பிளாஸ்டிக் பைகள். காய்கறி வாங்குவதில் தொடங்கி, கம்ப்யூட்டர் பேக்கிங் செய்வது வரை அனைத்துக்கும் பிளாஸ்டிக் கவர்கள்தான் பயன்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் மக்கும் தன்மையற்றவை.

இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் யாராலும் தவிர்க்க முடியாத பொருளாக பிளாஸ்டிக் பைகள் மாறிவிட்டன.

இந்நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு வீணாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை காருக்கான எரி பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து வாஷிங்டனில் வெளியாகும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒடிஸா மாநிலத்திலுள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் வேதியியல் நிபுணர் அச்யுத் குமார் பாண்டா மற்றும் ஒடிஸாவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியாளர் ரகுபன்ஷ் குமார் சிங் ஆகிய இருவரும் இணைந்து பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வில், பிளாஸ்டிக் பைகளை வெண் களிமண் (அலுமினியம் சிலிக்கேட்) ஊக்கியுடன் 400 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டது.

அதன் காரணமாக பிளாஸ்டிக்கின் நீண்ட மூலக்கூறுத் தொடர் உடைந்து, எரி பொருளுக்குரிய கரியமிலம் நிறைந்த சிறிய மூலக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன. அது வேதிவினைக்கு உட்படுத்தப்படும்போது எரிபொருளாக மாற்றப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆங்காங்கே பூமியை நிரப்பி வரும் பாலிதீன் பைகளின் எண்ணிக்கை குறைவதேடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.