வவுனியாவில் இந்திய வீட்டுத் திட்டத்தில் அமைச்சர் தலையீட்டால் மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்பாட்டம்!! (படங்கள்)

311

வவுனியா இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று (29) காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ள நிலையிலும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது அமைச்சரொருவரின் சிபாரிசில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்து பதாதைகளை ஏந்தியவாறு ´வீட்டுத்திட்டத்தை தா´, ´அமைச்சரே அதிகாரிகள் உனது கைக்கூலிகளா´, ´இந்திய அரசே வீட்டுத்திட்டத்தை யாருக்கு வழங்கினாய்´, ´அமைச்சர் பாராபட்சம் காட்டுகின்றார்´, ´ஜனாதிபதி செயலணியின் செயலாளரே நீர் அமைச்சருக்கு வக்காளத்து வாங்கதே´ என்ற கோசங்களையும் ஏந்தியவாறு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தனர்.

பங்கேற்றிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நின்று சில மணி நேரம் கோஷம் எழுப்பியதுடன் வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக கையளித்திருந்தனர்.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினாகளான க.பரமேஸ்வரன், எஸ்.பார்த்தீபன், பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.தேவராஜா உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதிக்கான மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போரினால் எமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கையில் இந்தியா மனமுவந்து எமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கென்று வீட்டுத்திட்டத்தை வழங்க முன்வந்தது.

நாமும் காணியில் ஒரு வீட்டைக்கட்டிக் கொண்டு இழந்துபோன எமது வாழ்க்கையையும் தொலைந்துபோன எமது வாழ்வாதாரத்தையும் ஓரளவிற்காவது கட்டியெழுப்பலாமென்ற எமது கனவு இப்போது அரசியல் தலையீட்டால் கலைந்து விட்டது.

பயனாளிகள் தெரிவு முறையாக நடத்தப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கைத்தொழில் அமைச்சரின் தலையீட்டினால் பயனாளிகளின் பட்டியல் திருத்தப்பட்டு பல்வெறு குழறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இது சகோதர சமூகங்களிடையில் பிளவையும் மோதல் போக்கையும் ஏற்படுத்துவதுடன் ஒரே இனத்திற்குள்ளேயும் பகைமையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

எனவே தாங்கள் இவ் விடயத்தில் காலதாமதமின்றி தலையிட்டு உரிய முறையில் பயனாளிகள் தெரிவை நடத்தி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை காலமும் நாம் குடியிருந்து வரும் தற்காலிக வீடும் சேதமடைந்து விட்டது என்பதனையும் தங்குவதற்கே இடமின்றி இருக்கின்றோம் என்பதனையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

அரசியல் இலாபம் கருதிய பயனாளிகள் தெரிவால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் நாம் எமது அன்றாட பணிகளில் கவனம் செலுத்த முடியாதுள்ளது.

பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாதுள்ளது. கர்ப்பிணி பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஆகவே தாங்கள் இந்த விடயத்தில் காலதாமதமின்றி தலையிட்டு உரிய பயனாளிகளுக்கு எவ்வித அழுத்தமும் தலையீடுமின்றி வீடுகள் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1112 13 14 15