வவுனியா சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் மக்கள் கூடியமையால் குழப்பம்!!

685

வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் சமுர்த்திப் பணத்தைப் பெறுவதற்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடியமையால் குழப்ப நிலைமை இன்று காலை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சமுர்திக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்றைய தினம் வழங்கப்படும் என சமுர்த்தி உத்தியோகர்தர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் கடனும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமது சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கி முன்பாக காலை 4 மணியில் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர்.

மகாறம்பைக்குளம், மதீனாநகர், கோவில்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 500 பேர் வரையில் அங்கு குவிந்தனர். ஆனால் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 8.30 மணியளவில் வருகை தந்து 250 பயனாளிகளுக்கு மாத்திரமே இன்றைய தினம் வழங்க முடியும் என தெரிவித்ததுடன், ஏனையவர்களை திரும்பிச் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

இதன்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. காலை 4 மணியில் இருந்து மக்கள் காத்திருந்த நிலையில் ஒவ்வொரு கிராமமாக அறிவிக்காது எல்லோரையும் வரவைத்து திரும்பி அனுப்பியமையால் தாம் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அத்தியாவசியப் பொருடக்களைக் கூட கொள்வனவு செய்யாது சமுர்த்திக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்த வவுனியா நகரம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் சமூர்த்தி வங்கியில் எந்தவித திட்டமிடலும் இன்றி மக்கள் குவிந்தமையால் நோய் தொடர்பான அச்சம் கூட ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, வந்து திரும்பிச் சென்ற மக்களுக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு அவர்களை திங்கள் கிழமை காலை வருமாறு சமுர்தத்தி உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்பியிருந்தனர்.