ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி உடல் தகனம்!!

387

ஹோமாகம வைத்தியசாலையில்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் சிகிச்சைப் பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது போலவே, குறித்த நபரின் இறுதிச் சடங்கு இடம்பெற்று முடிந்துள்ளது.

களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த நபருக்கு அருகில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால்தான் உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டமையினால் களுபோவில வைத்தியசாலையின் 5ம் அறை அண்மையில் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.