வவுனியா சிதம்பரபுர மக்களின் விருப்பமின்றி வேறு இடங்களில் குடியேற்றம் செய்யக் கூடாது : வடமாகாண சுகாதார அமைச்சர்!!(படங்கள்)

268

வவுனியா சிதம்பரபுரத்தில் 1992ம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழிடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா சிதம்பரபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர்களின் குறைகளை கேட்டறிந்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளக இடம்பெயர்வாலும் இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களுக்குமான இடைத்தங்கல் நலன்புரி முகாம்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தினால் 1994-95 காலப் பகுதியில் சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அங்குள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் இன்னும் 180 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி பாழடைந்த தற்காலிக முகாமிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை இவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடங்களில் குடியேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தாம் தொடர்ந்தும் சிதம்பரபுரத்திலேயே வாழவிரும்புவதாகவும் தமக்கு அதே இடத்தில் காணிவழங்குமாறும் மக்கள் அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக அடுத்தவாரம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடி நல்லதொரு முடிவு கிடைப்பதற்கு ஆவன செய்வதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மக்களின் குறைகளை கேட்டறியும் அதேவேளை படிப்படியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தன்னாலான முயற்சியை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் ஆசிகுளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான உபதபாலகம் அமைப்பது தொடர்பில், தான் மத்திய தபாற்சேவை அமைச்ர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க விரைவில் உபதபாலகமொன்று ஆசிகுளம் சந்தியில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

S1 s2 s3