வவுனியாவில் 6 கிராம அபிவிருத்திச் சங்கங்களால் இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்கக்கோரி மகஜர் கையளிப்பு!!

246

vav-makajar

வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சரஸ்வதி மோகனதாஸிடம் 6 கிராம அபிவிருத்தி சங்கங்கள் நேற்று (30.1) மகஜரினை கையளித்துள்ளனர்.

சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், தரணிக்குளம், மறவன்குளம், கல்மடு, பூம்புகார் கிராம அபிவிருத்தி சங்கங்களே மகஜரினை வழங்கியுள்ளனர். இதில் சுந்தரபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் வழங்கியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது..

எமது கிராமம் மிகவும் வறுமைக்கு உட்பட்ட கிராமம். எமது மக்கள் 1996 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 4 வருடங்களாக வசித்து 2001 ஆம் ஆண்டுக்குப் பின் தற்காலிக குடியேற்றம் செய்யப்பட்டோம்.

அன்று முதல் இன்று வரை எவ்வித வீடுகளும் எமக்கு கட்டித்தரப்படவில்லை. ஆனால் அதன் பிற்பாடு எமக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூலம் புள்ளி வழங்கல் அடிப்படையில் எமது கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று முன்தினம் (29.1) வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பானது எமக்கு வீடு கிடைத்துள்ளதை பறிமுதல் செய்யும் ஒன்றாகவே கானுகின்றோம்.

எமது கிராமத்தின் தெரிவில் அமைச்சரும்,அரச அதிகாரிகளும் எவ்வித செல்வாக்கினையும் செலுத்தவில்லை, அந்த தெரிவு முறையானதாகவே இடம் பெற்றுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்ளவிரும்புகின்றோம்.

தொடர்ந்தும் இவ்வாறான பொறுப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனில் அதற்கு எதிராக நாங்களும் வீதியில் இறங்கி நியாயத்துக்காக குரல் எழுப்ப நேரிடும், இந்த வீடமைப்பு திட்டத்தை எமக்கு தந்த இந்திய அரசாங்கத்துக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவ் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.