யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக ஏழு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!!

215

யாழில்..

யாழில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களால் களவாடப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட கண்காணிப்பு கமரா, மின்மோட்டார் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை போலிஸ் அதிகாரி முனசிங்க தலைமையிலான அணியினர் நடத்திய விசாரணையின் போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்தவாரம் யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் வயது முதிர்ந்த ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ். நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருட்களை திருடியதன் அடிப்படையில் குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மொத்தமாக களவாடப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை, களவாடப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்த அடிப்படையில் மொத்தமாக நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி போலிஸ் இன்ஸ்பெக்டர் முனசிங்க தெரிவித்துள்ளார்.