பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்!!

1046

பகுதியளவில்..

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் பகுதியளவில் இலங்கையை வழமை நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமையினை அவதானித்துப் பார்க்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது ஆரோக்கியமான நிலைமையே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டின் தேசிய பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். மக்களுக்கான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்.

ஆகவே அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானவர்களை வேலைக்கு வரவழைத்து நிறுவனங்களை செயற்பட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் குறைந்த ஏனைய வெளி மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் , நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்கு 50 வீதமானவர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அதேபோல் தனியார் துறையினரும் இவ்வாறான அரச ஆலோசனைகளை பின்பற்றி தமது ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க முடியும் என சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். சமல் ராஜபக்ஷ சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-